ராவணன் சீதையை காதலிக்கிறான். இதை பாடலில் எப்படி சொல்வது என்று யோசித்து 2 நாட்கள் நான் தூங்காமல் இருந்தேன். அதன்பிறகு தான் அந்த பாடலை எழுதினேன் என்று சூப்பர் ஹிட் பாடல் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ராவணன். ராமாயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரபு, கார்த்திக், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஒரே நேரத்தில் தமிழ் இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். தமிழில் வீரா கேரக்டரில் நடித்திருந்த விக்ரம், இந்தியில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருப்பார். தமிழில் விக்ரம் நடித்த கேரக்டரில் இந்தியில் அபிஷேக் பச்சன் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் விக்ரம் ஐஸ்வர்யா ராய் அழகில் மயங்கி பாடுவது போல் அமைந்திருக்கும் ‘உசிரே பொகுதே’ பாடல் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 2 நாட்கள் தூங்காமல் இருந்தேன். இது கத்திமேல் நடக்கிற செயல். சீதையை ராவணன் கடத்திக்கொண்டு வந்துவிட்டான். இது ஒருதலை காதல் அல்ல, 10 தலை காதல். இதற்கு பாடல் எழுதும்போது ராவணனையும் காயப்படுத்த கூடாது. அதே சமயம், சீதையையும் புண்படுத்த கூடாது. அடுத்தவன் மனைவி மீது காதல் கொண்டவனை நியாயப்படுத்த முடியுமா? அதனால் அவன் சாகிறான். சந்திரனும் சூரியனும் சுற்றி ஒரு கோட்டில் வருகிறது. கதறுகிறான் என்று இந்த பாடல் எழுதிய அனுபவத்தை கூறியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் ஐஸ்வர்யா ராயை கடத்திக்கொண்டு வந்தபோது, ஐஸ்வர்யா விக்ரமை வெறுப்பார். ஆனால் போக போக அவர் மீது அவருக்கு ஒரு அனுதாபம் பிறக்கும். இறுதியில் அவரை வைத்தே பிரித்விராஜ் விக்ரவை என்கவுண்டரில் கொலை செய்துவிடுவார்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


