தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் களமிறங்குவதால், அந்தத் தொகுதிகளில் தேர்தல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த விஜய், அதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, பெரம்பூர் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மற்றும் விஜய்யின் வாகன அணிவகுப்பிற்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக, பாதுகாப்பு காரணங்களைக் கருதி வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரம்பூரைத் தொடர்ந்து, தனது அடுத்த கட்டமாக நாளை மறுநாள் (ஏப்.2-ல்) திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். மனுத் தாக்கலைத் தொடர்ந்து திருச்சியில் அவர் பிரம்மாண்ட பிரச்சாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். விஜய்யின் திருச்சி பிரச்சாரத்திற்காகப் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. பெரம்பூர் பிரச்சாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது திருச்சி பிரச்சாரத்திற்கு மாநகர காவல்துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 23, 2026, வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026, திருச்சியில் காவல்துறையின் அனுமதி கிடைத்துள்ளதால், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரச்சார ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



