திருவண்ணாமலை காந்திநகர் புறவழிச் சாலை ஐந்தாவது தெருவில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது கணக்கில் வராத 2 கோடியே 67 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திருவண்ணாமலை காந்திநகர் புறவழிச்சாலை ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் சோமாசிபாடி என்ற கிராமத்தில் கல்குவாரி ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியிலிருந்து தனியார் மற்றும் அரசு பணிகளுக்கு எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்றவற்றை வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று சோமாசிபாடியில் உள்ள கல்குவாரியில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காந்திநகர் ஐந்தாவது தெருவில் உள்ள ஆதிமூலம் என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 2 கோடி 67 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமுலில் இருக்கும் பொழுது கல்குவாரி உரிமையாளர் வீட்டில் இருந்து கணக்கில் வராத 2 கோடியே 67 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


