தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் த.வெ.க தலைவர் விஜய் தன் வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னையில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய், திங்கட்கிழமை பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. விஜய் பிரச்சாரம் ரத்து: சென்னை கமிஷனர் மிரட்டுகிறார்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசிடம் அனுமதி கோரி த.வெ.க-வினர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, விஜய் பிரச்சாரத்திற்கு ஞாயிற்றுக் கிழமை இரவு போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், வில்லிவாக்கத்தில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரச்சாரம் செய்து முடிக்கும் படியும், தியாகராயநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரச்சாரம் செய்வும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இந்த நேரத்தில் விஜய் பிரச்சாரம் செய்து முடிக்க முடியாது என்பதால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் செவ்வாய் கிழமை விஜய் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் அந்நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் நாளை ஒரு மணி நேரம் மட்டும் பரப்புரை செய்யக் காவல் துறை அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், த.வெ.க கட்சி நிர்வாகம் தரப்பிலேயே இந்த ரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



