அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்து தற்போது தீவிரமான நிலையை எட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நேற்று ஈரானின் மிக உயரமான பாலம் ஒன்று அமெரிக்க இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். அங்குள்ள முக்கிய நகரமான டெல் அவிவில் 9 இடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈரான் போரில் தீவிரமடைந்துவரும் தாக்குதல்கள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல்களை தொடங்கிய நிலையில், ஈரானும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு உதவும் அரபு நாடுகளையும் விட்டுவைக்காமல் கடுமையாக தாக்கி வருகிறது ஈரான். அதோடு நிற்காமல், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் முடக்கி வைத்துள்ளது. அதனை திறக்க அமெரிக்க அதிபர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், ஈரான் சற்றும் அசராமல், தொடர்ந்து அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார். ஆனால், அதற்கு பயப்படாத ஈரான், ட்ரம்ப்பிற்கு பதில் மிரட்டல்களை விடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரு பெரிய எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்த நிலையில், இரவே அது செயல்பாட்டிற்கும் வந்துள்ளது. அதன்படி, ஈரானின் டெஹ்ரானில் இருந்து கராஜ் நகரை இணைக்கும் 136 மீட்டர் நீளம் கொண்ட பி1 பாலத்தின் மீது தாக்குதல் நடத்தி, அதை சேதப்படுத்தியுள்ளது அமெரிக்கா. இந்த நிலையில், அந்த தாக்குதல் வீடியோவையும் வெளியிட்டு, ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ட்ரம்ப். இந்நிலையில், இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. டெல் அவிவ் மீது சரமாரி ஏவுகணைத் தாக்குதலை நடத்திய ஈரான் இந்த சூழலில், தங்களது பாலம் நொறுக்கப்பட்டதால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை, டெல் அவிவ் நகரை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள், 9 இடங்களை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஒரு ரயில் நிலையம் மற்றும் கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக, இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவிர, அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள ஜோர்டான், ஈராக், வளைகுடா நாடுகள் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். இதனால், விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய சந்தைகளும் கடும் தாக்கங்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த போர் இன்னும் தீவிரமடைந்துள்ள நிலையில், எந்த தரப்பும் விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லாததால், வரும் நாட்களில் என்னென்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


