புதன் (Mercury), செவ்வாய் (Mars), சனி (Saturn) மற்றும் நெப்டியூன் (Neptune) ஆகிய 4 கோள்களும் இந்த வாரம் வானில் ஒரே நேர்க்கோட்டில் தோன்றி அணிவகுக்க உள்ளன. வானியலாளர்கள் இதனை 'கோள்களின் அணிவகுப்பு' (Planetary Alignment) என்றழைக்கின்றனர். எப்போது பார்க்கலாம்? ஏப்.16 முதல் 23 வரை இந்த அணிவகுப்பைக் காணலாம். ஏப்ரல் 18 முதல் 20 வரையிலான அதிகாலை நேரங்கள் இதை பார்க்க சிறந்தது. ஏப்.20 அன்று சனி, செவ்வாய், புதன் ஆகிய 3 கோள்களும் மிக நெருக்கமாகத் தோன்றும். உங்க கையை நீட்டி 3 விரல்களால் இந்த 3 கோள்களையும் மறைத்துவிட முடியும் அந்த அளவிற்கு அவை நெருக்கமாகத் தெரியும். கோள்களின் அணிவகுப்பு என்றால் என்ன? சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை ஒரே தட்டையான தளத்தில் சுற்றி வருகின்றன. பூமியிலிருந்து பார்க்கும்போது, பல கோள்கள் சூரியனின் ஒரே பக்கத்தில் வரும்போது, அவை வானின் ஒரு பகுதியில் கூட்டமாகத் தெரிகின்றன. இதுவே கோள்களின் அணிவகுப்பு எனப்படுகிறது. விண்வெளியில் இந்த கோள்கள் உண்மையில் நேர்க்கோட்டில் இருப்பதில்லை. அவை ஒன்றுக்கொன்று பல மில்லியன் கி.மீ. தொலைவிலேயே உள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது மட்டுமே அவை நெருக்கமாகத் தெரிகின்றன. இத்தகைய நிகழ்வுகளால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் இதைக் காண முடியுமா? ஆம், இந்தியாவிலிருந்தும் அதிசயத்தை காணலாம். ஆனால், இடத்திற்கு இடம் வானிலை மற்றும் நேரம் மாறுபடும். உள்ளூர் சூரிய உதயத்திற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பாகப் பார்க்கத் தொடங்க வேண்டும். இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணி முதல் 5:50 மணி வரை இது சரியான நேரமாகும். கொல்கத்தாவில் சூரியன் முதலில் உதிப்பதால் அங்கிருப்பவர்கள் முதலில் பார்க்கலாம். பின்னர் சென்னை, போபால், டெல்லி மற்றும் இறுதியாக மும்பையில் இருப்பவர்கள் இதைக் காணலாம். டெல்லி போன்ற வட இந்திய நகரங்களை விட சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி போன்ற தென்னிந்திய நகரங்களில் கோள்கள் வானில் சற்று உயரமாகத் தெரியும் என்பதால் இங்கிருந்து பார்ப்பது எளிது. எப்படி அடையாளம் காண்பது? புதன் (Mercury), மிகவும் பிரகாசமாகத் தெரியும் என்பதால் எளிதில் அடையாளம் காணலாம். சனி (Saturn), வானில் சற்று தாழ்வாகத் தெரியும். சூரிய உதயத்திற்கு முந்தைய வெளிச்சத்தில் இது மறைந்துபோக வாய்ப்புள்ளது. மற்ற மூன்றையும் வெறும் கண்ணால் பார்க்கலாம். ஆனால், மிக மங்கலாக இருக்கும் நெப்டியூனைப் பார்க்க பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி (Telescope) தேவைப்படும். உங்களால் அதிகாலை 5 மணிக்கு எழ முடியாவிட்டால், ஏப்.18 மாலை மற்றொரு அழகான நிகழ்வு காத்திருக்கிறது. அன்று சூரியன் மறைந்த பிறகு மேற்கு வானில் பிறை நிலவும், வீனஸ் (Venus) கோளும் அருகருகே தோன்றும். இந்திய நேரப்படி இரவு 7:30 மணி அளவில் மேற்கு திசையைப் பார்த்தால் இந்த அழகிய காட்சியைக் காணலாம். மேகமூட்டம் அல்லது தூசி இல்லாத தெளிவான வானம் அமைந்தால், இந்த வாரம் வானியல் ஆர்வலர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



