கடலுக்கு அடியில் மீன்கள் எப்படி மிகச்சரியாக மேலேயும் கீழேயும் நீந்துகின்றன என்று என்றாவது யோசித்ததுண்டா? இதற்கு அவற்றின் இரு கண்கள் மட்டும் காரணமல்ல; அவற்றின் மூளைக்கு மேலே இருக்கும் "மூன்றாவது கண்" தான் உண்மையான கில்லாடி. சமீபத்தில் ஒசாகா மெட்ரோபொலிட்டன் பல்கலை. விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சீப்ராஃபிஷ் எனும் மீன்களின் ரகசிய நரம்பு மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மீன்களின் மூளைக்கு மேல்பகுதியில் 'பீனியல் உறுப்பு' (Pineal Organ) என்ற ஒரு அமைப்பு உள்ளது. இதைத்தான் விஞ்ஞானிகள் செல்லமாக மூன்றாவது கண் என்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த உறுப்பு ஒளியை உணரும் என்று தெரிந்திருந்தாலும், அது மீனின் செயல்பாட்டை எப்படி மாற்றுகிறது என்பது ஒரு மர்மமாகவே இருந்தது. இப்போது, அந்த மர்ம முடிச்சை அவிழ்த்துள்ளார் பேராசிரியர் அகிஹிசா டெராகிடா. இந்த மூன்றாவது கண்ணில் PP1 என்ற ஒரு விசேஷப் புரதம் உள்ளது. இது சாதாரணக் கண்களை விட புத்திசாலித்தனமானது.இது வெறும் வெளிச்சத்தை மட்டும் பார்க்காமல், சூரியனின் 'புற ஊதா கதிர்' மற்றும் 'சாதாரண ஒளி' ஆகியவற்றுக்கு இடையே உள்ள விகிதத்தைக் கணக்கிடுகிறது. நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க ஒளியின் நிறம் மாறும். இந்த நிற மாற்றத்தை வைத்து, நாம் இப்போது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறோம்? என்பதை மீன்கள் சட்டென்று புரிந்துகொள்கின்றன. இந்த ஆய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, மீனின் சாதாரணக் கண்களும், இந்த மூன்றாவது கண்ணும் எப்படி ஒன்றாக வேலை செய்கின்றன என்பதுதான்: டெக்மென்டம் (Tegmentum)- இது மீனின் மூளையில் உள்ள ஒரு கட்டுப்பாட்டு அறை. பீனியல் உறுப்பில் இருந்தும், கண்களில் இருந்தும் வரும் தகவல்கள் இங்கேதான் சந்திக்கின்றன. பீனியல் உறுப்பு நிறம் மாறிவிட்டது, கீழே போ என்று சொல்லும். கண்கள் அந்தத் தகவலை சரிபார்த்து, சரியான நேரத்தில் அந்தத் திசையில் நகர மீனுக்கு உதவுகின்றன. விஞ்ஞானிகள் ஒரு சோதனையில் மீன்களின் கண்களை நீக்கிவிட்டுப் பார்த்தார்கள். அப்போதும் அந்த மீன்களால் நிற மாற்றத்தை உணர முடிந்தது. ஆனால், சரியான டைமிங்கில் அவற்றால் செயல்பட முடியவில்லை. இதிலிருந்து, திசையைத் தீர்மானிப்பது மூன்றாவது கண் என்றும், வேகத்தையும் நேரத்தையும் முடிவு செய்வது சாதாரணக் கண்கள் என்றும் உறுதியாகியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு மீன்களைப் பற்றி அறிந்து கொள்ள மட்டும் உதவப்போவதில்லை. மனிதர்களின் நரம்பியல் சிகிச்சையிலும் இது பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம். ஆப்டோஜெனெடிக்ஸ் (Optogenetics)- இந்த PP1 புரதத்தைப் பயன்படுத்தி, மனித மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்புகளை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தும் புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும். மீன்கள் நீருக்குள் மேலேயும் கீழேயும் நீந்துவது வெறும் தற்செயல் நிகழ்வல்ல; அது ஒரு மிகச்சிறந்த 'நரம்பியல் பொறியியல்' வேலை. ஆதாரம்: PNAS அறிவியல் இதழ்
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

