விண்வெளியின் ஆழமான மர்மங்களை தேடி பயணிக்கும் மனிதகுலத்திற்கு, 800 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து ஒரு விசித்திரமான அழைப்பு கிடைத்துள்ளது. ஆம், விண்வெளியில் 2 விண்மீன் திரள்கள் ஆவேசமாக மோதிக்கொண்டபோது உருவான, இதுவரை கண்டிராத மிக சக்திவாய்ந்த மெகாமாசர் (Megamaser) என்ற விண்வெளி லேசரை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக நாம் பயன்படுத்தும் லேசர்கள் ஒளியை உமிழும். ஆனால், இந்த 'விண்வெளி லேசர்' கண்ணுக்குத் தெரியாத, அதீத ஆற்றல் கொண்ட ரேடியோ அலைகளை வெளியிடுகிறது. தென் ஆப்ரிக்காவில் உள்ள 'மீர்காட்' என்ற பிரம்மாண்ட ரேடியோ டெலஸ்கோப் மூலம் இந்த சிக்னல் பிடிக்கப்பட்டுள்ளது. 2 விண்மீன் திரள்கள் மோதிக்கொள்ளும்போது, அங்கு வாயு மேகங்கள் மிக நெருக்கமாக அழுத்தப்படுகின்றன. இந்த அடர்த்தியான மேகங்களுக்குள் இருக்கும் மூலக்கூறுகள், ரேடியோ அலைகளை பல கோடி மடங்கு பெருக்கமடைய செய்து, பிரபஞ்சம் முழுவதும் பயணிக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த 'லேசர்' கற்றையாக மாற்றுகின்றன. 800 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள HATLAS J142935.3-002836 என்ற விண்மீன் மண்டலத்திலிருந்து வந்த இந்தச் சிக்னல், இவ்வளவு தெளிவாக நமக்குக் கிடைத்ததற்கு ஒரு மேஜிக் காரணம் உண்டு. அதுதான் 'ஈர்ப்பு விசை லென்சிங்' (Gravitational Lensing). விண்வெளியில் உள்ள மற்ற பிரம்மாண்ட பொருட்கள் ஒரு லென்ஸ் போலச் செயல்பட்டு, பின்னால் இருக்கும் இந்த லேசர் சிக்னலை நமக்கு வளைத்து, பெரிதாக்கிக் காட்டியுள்ளன. இந்த 'இயற்கை பூதக்கண்ணாடி' மட்டும் இல்லையென்றால், இந்தச் சிக்னலை நாம் கண்டறிந்திருக்கவே முடியாது. விஞ்ஞானிகள் இந்த சிக்னலை ஆராய்வது என்பது, கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கிச் செல்வதற்குச் சமம். ஏன் தெரியுமா? இந்தச் சிக்னல் பூமியை அடைய 800 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது. அதாவது, நமது சூரிய குடும்பம் உருவாவதற்கு முன்பே விண்வெளியில் என்ன நடந்தது என்பதை இன்று நாம் நேரலையாக பார்ப்பது போன்றது இது. ஆராய்ச்சியாளர் தாடோ மனமேலா குறிப்பிடுவது போல, மிக அதிக தொலைவில் இருந்து வந்த இந்தச் சிக்னல், விண்மீன் திரள்கள் எப்படி உருவாகின்றன மற்றும் பிரபஞ்சத்தின் ஆரம்பகால சூழல் எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு திறவுகோலாகும். இந்த கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரை விரைவில் அறிவியல் இதழில் வெளியாக உள்ளது. விண்வெளி என்பது ஒரு தீராத மர்மம் என்பதை இந்த 'விண்வெளி லேசர்' மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

