TN Election 2026 Nomination: வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளிலேயே முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழக தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளாக போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், வேட்புமனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று தொடங்குகிறது. வரும் 6ம் தேதி வரையில் விருப்பமுள்ள, தகுதியான நபர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் 7ம் தேதி பரிசீலிக்கப்படும். 9ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் நாளான இன்றே முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். ஆரம்பத்திலேயே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனராம். கொளத்தூரில் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்.. சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது முறையாக களமிறங்க உள்ளார். அதேநேரம், மார்ச் 31ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சூறாவளி பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக முதல்நாளான இன்று கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அலுவலகத்துக்கு இன்று மதியம் 12 மணியளவில் வருகை தந்து, தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியான எஸ்.சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளாராம். பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்நாளான இன்றே பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகலில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தவெக சார்பில் அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளதால், காலையிலேயே வேட்புமனு தாக்கல் செய்வார் என பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பரபுரையை தொடங்குவதோடு, ஏப்ரல் 2ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் நாதக இதனிடையே, வழக்கம்போல் தமிழ்நாட்டிலேயே முதல் கட்சியாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி, இன்று அனைத்து தொகுதிகளிலும் ஒரே அடியாக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், காரைக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதேபோன்று பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் ஆரம்பத்திலேயே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, தீவிர பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனராம். வேட்புமனு - முக்கிய விவரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்கள் 3 வாகனங்களில் மட்டுமே வரவேண்டும் வாகனங்களை தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு முன்பே நிறுத்திவிட வேண்டும் வேட்பாளர் மற்றும் அவருடன் 3 பேர் மட்டும் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் வேட்பு மனு தாக்கலுக்கு 8 நாட்கள் அவகாசம் இருந்தாலும் அவற்றில் 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் மற்ற நான்கு நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். இதனிடையே, வேட்பாளர்கள் வேட்பு மனுவை இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமும் சமர்ப்பிக்கலாம். ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கலின் போது நேரில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்கள், வேட்பு மனுவில் பெயர் உள்பட அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
TN Election: முதல் நாளே ஸ்டாலின், விஜய் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் - 234 தொகுதிகளிலும் நாதக ப்ளான்
|16 மணி நேரம் முன்|குலசேகரன் முனிரத்தினம்|Abp News
