அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில், ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு கெடு விதித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று அந்த கெடுவை ஒரு நாள் நீட்டித்து, இறுதி எச்சரிக்கை கொடுத்திருந்தார். இந்த நிலையில், அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் அவர் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளது குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம். ஏற்கனவே கெடு விதித்திருந்த ட்ரம்ப் ஏற்கனவே, நேற்று முன்தினம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்ட ட்ரம்ப், டெஹ்ரான் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினாலோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கத் தவறினாலோ, ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறி, கடும் ஆபாச வார்த்தைகளால் திட்டியிருந்தார். அந்த பதிவில், "ஈரானில் செவ்வாய்க்கிழமை, மின் உற்பத்தி நிலைய தினமும், பால தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படவுள்ளது. இதைப்போல் வேறு எதுவும் இருக்காது!!! அந்தப் பாழாய்ப்போன ஜலசந்தியை திறங்கள், பைத்தியக்காரர்களே, இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ்வீர்கள் - பொறுத்திருந்து பாருங்கள்! அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்," என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, காலக்கெடு முடிவடையும் சரியான நேரத்தைக் குறிப்பிடும் ஒரு பதிவையும் வெளியிட்டார். அதில், செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி (கிழக்கு நேரப்படி) என்று குறிப்பிட்டிருந்தார். “ஒரு இரவு போதும், ஈரானை முழுவதுமாக அழித்துவிடலாம்“ இந்த நிலையில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்திலிருந்து தப்பிய விமானி மீட்டு வரப்பட்டதை கொண்டாடும் நிகழ்வில் நேற்று பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், ராணுவம் இதுவரை மேற்கொண்ட மிகப்பெரியதும், சிக்கலானதுமான பெரும் பதற்றம் நிறைந்த தேடுத் வேட்டையின் வெற்றியை கொண்டாட நாம் இங்கு கூடியுள்ளோம் என்றும், ஒரு வீரரை மீட்க 200 வீரர்கள் அனுப்பபப்படுவது என்பது எளிதில் முடியாக காரியம் என்றும் கூறினார். இத்தகைய விஷயத்தை அவ்வளவு எளிதில் யாரும் செய்யத் துணிய மாட்டார்கள் என்றும், அந்த பணியில் பல சிறந்த மனிதர்கள் உதவினார்கள் என்றும் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த பணியில் ஈடுபட்டது தங்களுக்கு கிடைத்த பெருமை எனவும், இது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு என்றும் தெரிவித்தார். அதோடு, ஈரானில் சிக்கிய வீரரை மீட்கும் நடவடிக்கை 7 மணி நேரத்தில் முடிந்தது என்றும், ஈரானின் மையப்பகுதியில் சென்று விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், எந்த அமெரிக்கரையும் விட்டு விட மாட்டோம் எனவும் அவர் கூறினார். மேலும், ஈரான் குறித்து கூறிய அவர், ஒட்டுமொத்த நாடே ஒரு இரவில் அழித்து ஒழிக்கப்படும் என்றும் அந்த ஒரு வேளை நாளை(இன்று) இரவாகக் கூட இருக்கலாம் என்றும் இறுதி எச்சரிக்கையை விடுத்தார். தொடர்ந்து, அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட குறித்தும், விரர் அங்கு சிக்கிக் கொண்டது தொடர்பாகவும், அமெரிக்காவில் உள்ள சிலர், ஈரானுக்கு தகவல் கொடுத்துள்ளதாக கூறிய ட்ரம்ப், அவர்களை கண்டறிந்து சிறையில் தள்ளுவோம் என்றும் உறுதிபடக் கூறினார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



