திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, இம்மலையை முழுமையாக அளவீடு செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரை இந்த வழக்கில் கூடுதல் எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து வருவாய்த் துறையினர் வரும் மே மாதத்திற்குள் அளவீட்டுப் பணிகளை முடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு மனுவில், திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, “திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்த பிறகே அதை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். மத்திய தொல்லியல் துறை அளவீடு செய்ய தயாராக உள்ளது. ஆனால் வருவாய் துறையினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், முக்கிய உத்தரவை பிறப்பித்தனர். அதன்படி, இந்த வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டரை கூடுதல் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், கலெக்டர் மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய வேண்டும் என்றும், இதற்காக வருவாய் துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினர். இந்த முழு நடவடிக்கையும் அடுத்த மாதமான மே மாதத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


