தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் என 6,063 பேர் தபாலில் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 40% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 6,063 பேர் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் வசிக்கும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் ஜனநாயகக் கடமையை எளிதாக ஆற்றும் வகையில் "இல்லம் தேடிச் சென்று தபால் வாக்கு சேகரிக்கும்" திட்டத்தை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது. அதன்படி, கடந்த ஏப்.13, 14, 15 ஆகிய மூன்று தினங்களில், தபால் வாக்களிக்க விண்ணப்பித்த வாக்காளர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கப்பட்டது. இப்பணிகளைச் மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் மொத்தம் 100 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் திருவிடைமருதூர் தொகுதியில் 498 முதியோர்கள் மற்றும் 187 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 685 வாக்காளர்களுக்காக 12 குழுக்கள், கும்பகோணம் தொகுதியில் 705 முதியோர்கள் மற்றும் 206 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 911 வாக்காளர்களுக்காக 14 குழுக்கள், பாபநாசம் தொகுதியில் 484 முதியோர்கள் மற்றும் 242 மாற்றுத்திறனாளிகள் என 726 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள் அமைக்கப்பட்டது. திருவையாறு தொகுதியில் 389 முதியோர்கள் மற்றும் 184 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 573 வாக்காளர்களுக்காக 11 குழுக்கள், தஞ்சாவூர் தொகுதியில் 634 முதியோர்கள் மற்றும் 152 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 786 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள், ஒரத்தநாடு தொகுதியில் 632 முதியோர்கள் மற்றும் 143 மாற்றுத்திறனாளிகள் 775 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள் அமைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை தொகுதியில் 515 முதியோர்கள் மற்றும் 268 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 783 வாக்காளர்களுக்காக 10 குழுக்கள், பேராவூரணி தொகுதியில் 577 முதியோர்கள் மற்றும் 247 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 824 வாக்காளர்களுக்காக 14 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 4,434 முதியோர்கள் மற்றும் 1,629 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6,063 வாக்காளர்கள் இந்த வசதியைப் பெற்று உள்ளனர். மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், 6,063 பேர் மட்டுமே தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

